இஸ்லாமியக் கிலாபத் ஒழிக்கப்பட்டு 100 வருடங்கள் ( ஒரு சகாப்தம்) கடந்த நிலையில், அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்.
இஸ்லாமியக் கிலாபத் ஒழிக்கப்பட்டு 100 வருடங்கள் ( ஒரு சகாப்தம்) கடந்த நிலையில், அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்.
பகுதி - 01
தொகுத்து வழங்குபவர்
M.I.M. Jawher Rahman.
Poruthota, Kochchikade .
உலக வரலாற்றில் சுமார் 1300 வருட காலங்கள் நீடித்த இஸ்லாமியக் கிலாபத்தை ஒழித்து, கடந்த வருடத்தோடு ( 2022 ) 100 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
பிரித்தாளும் பிரித்தானியாவும்,
பிரிவினை காட்டும் பிரான்சும்,
பிரிவு படாமல் ஒன்றுபட்டு பின்னிப் பினைந்திருந்த கிலாபத்தை
பிரித்துவிடக் கங்கனம் கட்டிய காலம்.
பிற்கால மக்களும் பிளவு படாமல் ஒற்றுமையாக ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தி நிற்கின்றது.
கிலாபத்தின் வீழ்ச்சிக்கு முன்னால், அதன் வளர்ச்சிப் பாதைகளை சற்று மேலோட்டமாக ஆராய்வது சிறப்பானதாகும்.
கி.பி.622- கி.பி. 632
அல்லாஹ்வின் இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் ஆட்சிக்காலம் .
மதீனா ஹிஜ்ரத் முதல் இக்காலம் ஆரம்பிக்கின்றது.
இறைத்தூதை ஒப்புவிக்கும் பணியுடன் சேர்த்து மதீனா நகரின் அரசியற் தலைமைத்துவத்தையும் தாங்கி நின்றார்கள். எனினும் மக்கள், அவர்களை ஆட்சியாளர் என்ற தரத்திலன்றி இறைத்தூதர் என்ற அந்தஸ்த்திலேயே கண்ணியப்படுத்தி அவருக்கு அடிபணிந்து நடந்தார்கள்.பின்பற்றினார்கள்.
அன்பின் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!
அல்லாஹ்வின் கட்டளைப்படி, குர்ஆனிய சமுதாயத்தைக் கட்டியெழுப்ப நபியவர்கள் அம்மக்களைப் பயிற்றுவித்தார்கள்.
முக்காலத்தையும் பேசும் அல்குர்ஆன் ; எக்காலத்திற்கும் பொருத்தமானதே.
அல்குர்ஆன் அல்லாஹ்வின் தூய வார்த்தைகளாகும். அதில் எவ்வித இடைச்செருகல்களையும் மாற்றத்தையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு போதும் செய்துவிட முடியாது. அல்குர்ஆன் இறைவாக்காகும். எவராலும் அது போல ஒன்றை இயற்ற முடியாது.
" நபியே! இது வேதமாகும். இதனை உம்மீது இறக்கி அருளியுள்ளோம். மக்களை அவர்களுடைய இறைவனின் உதவி கொண்டு இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் நீர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக!" (14:1-2)
"நிச்சயமாக இது அகில உலக இரட்சகனிடமிருந்து இறக்கப்பட்டதாகும்".(26:192). போன்ற வசனங்கள் தெளிவு படுத்துகின்றன.
அல்குர்ஆன்,
பாலை நில மண்ணில் காட்டுமிராண்டிகளாகவும், நாடோடிகளாகவும் வாழ்ந்த மக்களை,
உலக நாகரீகத்தின் சிற்பிகளாக,
உலகாளும் மன்னர்களாக பின்னாளில் மாற்ற இருக்கிறது என்பதை
பாரசீக, ரோம பைஸாந்திரிய சாம்ராஜ்யங்கள் அறிந்தார்களா என்ன?
இந்த வல்லரசுகளுடைய முகங்கள் திரும்பிக்கூடப் பார்க்காத பாலை நிலப்
புதல்வர்களை
உலகம் மதிக்கப் போகிறது;
வியந்து பார்க்கப் போகிறது;
உதாரண புருஷர்களாக்கப்போகிறது என்று அவர்கள் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை.
எனவே இத்தகைய ஒப்பற்ற நாகரீகமும், பண்பாடும் கொண்ட சமுதாயத்தை தோற்றுவித்த பெருமை அல்குர்ஆனையே சாரும்.
மதீனா ஹிஜ்ரத்தின் பின்பு, முஹம்மத் நபி (ஸல்) அவர்களால், மதீனாவில் கட்டமைக்கப்பட்ட இஸ்லாமிய அரசானது,
உலகில் அரசு எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதற்குச் சிறந்த உதாரணமாகும்.
பண்டைய கிரேக்க, ரோம, பாரசீக சாம்ராஜ்யங்களை எடுத்துக் கொண்டால், அவைகள் மன்னராட்சி முறைமையைக் கொண்டிருந்தன. மன்னன் தெய்வத்திற்கு சமமாக மதிக்கப்பட்டான். மன்னனுடைய கட்டளைகளும் ஏவல்களும், தெய்வத்துடைய கட்டளைக்கும், ஏவல்களுக்கும் சமமானது என்ற கருத்து அக்காலங்களில் மக்கள் மத்தியில் திணிக்கப்பட்டிருந்தன. இதனை 'தெய்வ உரிமைக் கோட்பாட்டாளர்கள் அரசு தெய்வத்திடமிருந்தே தோன்றியது' என்கின்றனர்.
ஆனால்,
பிற்காலத்தில் வந்த அரசியல் அறிஞர்களான,
தோமஸ் ஹொப்ஸ்(1588-1679),
ஜோன் லொக்(1632-1704),
ரூஸோ(1712-1788)
போன்ற அறிஞர்கள் " சமூகங்களோடு சமூகங்கள் செய்த கொண்ட ஒப்பந்தத்தின் விளைவாகவே அரசு தோன்றியது " என்பதை நிரூபித்தனர்.
இந்தக் கோட்பாடுகளுக்கு சுமார் 10 நூற்றாண்டுகளுக்கு முன்பே முகம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் தமது நிலைமையை ஸ்திரப்படுத்திக் கொண்டதன் பின்னர் பொதுநல அரசாங்கமொன்றை நிறுவினார்கள். இது மதீனாவிலுள்ள சமூகங்களோடு சமூகம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் விளைவாக ஏற்பட்டதாகும்.
நீதி, நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு என்பன இந்த இஸ்லாமிய அரசின் அடிப்படை அம்சங்களாக அமைந்தன.
இவ்வரசாங்கம் முஸ்லிம்களின் சகோதரப்பிணைப்பிலேயே உருவானது. முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் ஒன்றினைப்பதன் மூலம் சகோதரத்துவத்திற்கு அடித்தளம் இட்டார்கள்.
இவ் அரசாங்கத்தை ஆரம்பிக்கும் போதே மகா சாசனம் என்ற மதீனா சாசனத்தை எழுத்துருவில் வடித்துக் கொடுத்தார்கள்.( இதுவே முதன் முதலில் உலகத்தில் வரையப்பட்ட, எழுதப்பட்ட அரசியல் யாப்புக்களில் முதன்மையானதாகும்.
இச் சாசனத்தின் மூலம் எல்லா வகையான வர்க்க பேதங்களும் ஒடுக்கப்பட்டதுடன், எல்லோருக்கும் சமமான குடியியல் உரிமைகள் வழங்கப்பட்டன. இவ் அரசியல் அமைப்பில் யூதர்களும், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் ஒன்று சேர்க்கப்பட்டனர். முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்ட அதே உரிமைகள் யூத, கிறிஸ்தவர்களுக்கும், இதர குல கோத்திரங்களுக்கும் கொடுக்கப்பட்டன.
47 சர்த்துக்களைக் கொண்ட இந்த யாப்பு, முஸ்லிம்கள் சார்பாக 23 சரத்துக்களையும், ஏனைய யூத கிறிஸ்தவ கோத்திரங்கள் சார்பாக 24 சர்த்துக்களையும் கொண்டிருந்தது.
மக்காவிலே புறக்கணித்து ஒதுக்கப்பட்ட நபியவர்கள், மதீனாவிலே மாபெரும் தலைவராக மாறினார்கள். மதீனாவின் வரலாற்றிலே மாபெரும் சீர்திருத்தப் புரட்சியை தோற்றுவித்ததுடன், குர்ஆனிய கருத்துக்களின் அடிப்படையில் மதீனா மக்களின் உன்னத சமய, சமூக, அரசியல் வாழ்க்கையை உருவாக்கினார்கள்.
வரலாற்றுக் கண்ணோடு நோக்கும்போது, என்றைக்குமே ஏற்பட்டிராத புரட்சிகர வெற்றியாக இது அமைந்துள்ளது. இதுவரை காலமும் ஆட்சி செய்த எந்த ஒரு அரசர்களும் இவ்வித புரட்சியை ஏற்படுத்த வில்லை.
ஆனால் பிற்காலத்தில் இது போன்றதொரு புரட்சி ஏற்படுவதற்கு இதுவே மூல காரணமாகும் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
Professor Joseph Hell குறிப்பிடும்போது "மகா சாலமன் சக்கரவர்த்தி கூட , தான் இயற்றிய சாசனம் முஹம்மது நபியின் இந்த மதீனா சாசனத்தின் பின்னணிதான்" எனக் கூறியுள்ளார்.
திருக்குர்ஆன் துறவு மடங்களிலோ,
சமயப் பள்ளிகளிலோ இருந்து கொண்டு, அதன் கருத்துக்களை இரகசியமாக அறிந்துகொள்ளக்கூடிய நூலன்று. அறிஞர்களால் மட்டும் விவாதிக்கப்படும் ஒரு தத்துவநூலுமன்று. இறைமறை ஓர் உயிருள்ள இயக்கத்தைத் தோற்றுவிக்க வந்த உயரிய வேத நூல் ஆகும்.
இதனால்தான் முதன் முதலில் இஸ்லாமிய வரலாற்றில் நடைபெற்ற யுத்தத்திலே முஸ்லிம்கள் மாத்திரம், அதாவது முஹாஜிர்களும் அன்சாரிகளும் மாத்திரம் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்கள். இந்த நாளில் அல்லாஹ் முஸ்லீம்களுக்கு சந்தோஷத்தை வழங்கினான்.
இது போல் நபியவர்களின் காலத்தில் உஹது, பனூ நளிர், ஹந்தக், பனூ குறைழா, தாத்துர் ரிகாஉ, முறைசிஉ, ஹுதைபியா, தாத்துல் கரத், கைபர், முஃதா, பத்ஹு மக்கா, ஹுனைன், தாயிப், துல்கலசா போன்ற பல்வேறு போராட்டங்களும், சமாதான உடன்படிக்கைகளும் இடம்பெற்றிருக்கின்றன. இவ்வாறு சமாதான சகவாழ்வுக்கான உடன்படிக்கைகளை எதிர் தரப்பாருடன் செய்தல், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டல், நீதி செலுத்துதல், மனிதர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற அரசியல் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டிருந்த போதும், அரசியல் தலைவராக இனங்காட்டப் படாது, இறை தூதராகவே இனங்காட்டப்பட்டார்கள். காரணம் அரசியல் தலைமைத்துவத்தை விட நபித்துவம் கண்ணியமிக்கதாக இருந்தமையும், நபித்துவம் என்பது அரசியல் உட்பட உலகியல் விடயங்கள் அனைத்துடன், ஆன்மீகத்துறையையும் உள்ளடக்கியதாக இருந்தமையும், நபித்துவம் என்பது மனிதர்களால் முயற்சி செய்து பெற்றுக் கொள்ள முடியாத ஓர் இறை அருளாக இருந்தமையும், நபிகளார் (ஸல்) அவர்கள் ஆட்சியாளர் என்றல்லாது இறை தூதராக மக்களால் கண்ணியப்படுத்தப் படுவதற்கான காரணங்களாக அமைந்தன.
எனவே நபிகளாரின் வபாத்துடன் நபித்துவம் முற்றுப் பெற்றதும் அவர்களின் பிரதிநிதியாக நின்று குலபாஉர்ராஸிதூன்கள் ஆட்சி செய்த காலப்பகுதியிலேயே அரசியல் முதன்மை பெற்றதுடன், இஸ்லாமிய அரசியல் கோட்பாடும் நடைமுறைக்கு வந்தது எனலாம்.
இன்ஷா அல்லாஹ்
தொடரும்............
கருத்துகள்
கருத்துரையிடுக