இஸ்லாமியக் கிலாபத் ஒழிக்கப்பட்டு 100 வருடங்கள் ( ஒரு சகாப்தம்) கடந்த நிலையில், அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்.

இஸ்லாமியக் கிலாபத் ஒழிக்கப்பட்டு 100 வருடங்கள் ( ஒரு சகாப்தம்) கடந்த நிலையில், அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும். 

பகுதி - 05


 தொகுத்து வழங்குபவர் 

 M.I.M.Jawher Rahman. 

 Poruthota, Kochchikade. 


 கி.பி.632 - கி.பி. 661 வரை குலபா உர் ராஸிதூன்களின் காலம்.

.............................................


 கி.பி. 634 - கி.பி. 644 வரை கலீஃபா உமர்( ரலி) அவர்களின் ஆட்சிக்காலம்.

------  ---------   ----------   ------

 கஃபதுல்லாஹ்வின் எல்லைகள் (கி.பி. 639) விரிவாக்கப்படல் :-


கி.பி.639 ஆம் ஆண்டில் உமர் (ரலி) அவர்கள் மக்காவிலுள்ள புனித இறையில்லமான கஃபாவை விரிவாகக் கட்ட ஆரம்பித்தார்கள். அதற்காக அதனை அடுத்திருந்த வீடுகளை விலைக்கு வாங்கி, இடிக்கப்பட்ட பின்னர் அந்த இடங்களில் மஸ்ஜித் விரிவாக்கப்பட்டது. முன்பு மஸ்ஜிதின் சுவர்களில் விளக்குகள் ஏற்றப்படவில்லை. முதன் முறையாக உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தில் மஸ்ஜிதினுள் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன.

 முன்பு கஃபாவைச் சுற்றி கட்டப்பட்டிருந்த துணி சாதாரண துணியினால் ஆனது. பின்னர் அதற்காக பிரத்தியேகமான துணி எகிப்திலிருந்து வரவழைக்கப்பட்டு, நெய்யப்பட்டு கஃபாவைச் சுற்றிக் கட்டப்பட்டது.


  மக்காவில் புனித ஹரம் பகுதியைப் பிரித்து, அவை புனிதப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. அதாவது, ஒரு திசையை நோக்கி 3 மைல்கள் அளவும், இன்னும் ஏனைய பகுதிகளில் 7 மைல்கள் அளவும் அளவிடப்பட்டு, அதற்கு இடைப்பட்ட பகுதிகள் புனிதப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. அதனை அடையாளப்படுத்த அடையாளக் கற்களும் ஊன்றப்பட்டன. அவற்றுக்கு "அன்சாப்" என்றும் பெயரிடப்பட்டது.


05. கி.பி. 639 இல், மஸ்ஜிதுன் நபவி விரிவாக்கம் செய்யப்படுதல்:-


மஸ்ஜிதுன் நபவியைச் சுற்றி இருந்த வீடுகளை விலைக்கு வாங்கி அவற்றை இடித்து விட்டு, அந்தப் பகுதிகளில் விரிவு செய்யப்பட்டது. (இந்தச் சந்தர்ப்பத்தில் நடந்த பிரச்சினைப் பற்றி அதிகார வேராக்கம் என்ற தலைப்பில் பின்னர் இடம் பெறும்- separation of power.) 

இவ்வாறு விரிவாக்கப்பட்டதன் காரணமாக மஸ்ஜிதின் அளவானது நீள வாக்கில் 100 மீட்டரில் இருந்து 140 மீட்டர் ஆகவும் ,

அகல வாக்கில் 60 மீட்டரில் இருந்து 80 மீட்டராகவும் (140m x 80m ) அமையப்பெற்றன. மஸ்ஜிதுக்குள் முதன்முதலாக விளக்கு ஏற்றி வைத்தவரும் உமர் (ரலி) அவர்களே.  பின்னர் மஸ்ஜிதின் தரைகள் சீர் செய்யப்பட்டு அவற்றில் பாய்கள் விரிக்கப்பட்டன.

சமூகப் புணரமைப்பில் மஸ்ஜிதுகளின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.இதனால் தான் தொடர்ச்சியாக இஸ்லாமியக் கிலாபத் விரிவடைந்து கொண்டு செல்லும்போது, வளர்ச்சியடைந்த அந்தந்தப் பிரதேசங்களிளெல்லாம் முதன் முதலாக மஸ்ஜிதுகளே நிர்மாணிக்கப் பட்டன.

அமீருல் முஃமினீன் கலீஃபா உமர்(ரலி) அவர்கள், இதற்கான உத்தரவைத் தமது தளபதிகளுக்கும் கவர்னர்களுக்கும் பிறப்பித்திருந்தார்கள்.

   புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நகரங்களான குபா, பஸரா ஆகியவற்றின் மத்தியில் ஜும்மா மஸ்ஜிதுகளையும், ஒவ்வொரு கோத்திரத்தாரின் பகுதிகளில் சிறு சிறு மஸ்ஜிதுகளும் கட்டப்பட்டன. இவ்வாறாக அமீருல் முஃமினீன் கலீஃபா உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தில் மட்டும் சுமார் 4000  மஸ்ஜிதுகள் சிறிதும் பெரிதுமாகக் கட்டப்பட்டன என்று வரலாறு சான்று பகன்று கொண்டிருக்கின்றது. 

அல்ஹம்துலில்லாஹ்.


06. கி.பி. 640 இல், 

கைஸாரிய்யாவின் போர், ஷாம் தேசம் முழுவதும் இஸ்லாமியக் கிலாபத்தினுள் உள்வாங்கப்படுதல்.


07. கி.பி. 641 இல், 

ஹமதான் வெற்றி கொள்ளப்படல்.


08. கி.பி. 642 இல், 

இஸ்ஃபஹான் முஸ்லிம்களின் வசமாகுதல்.

அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களின் தலைமையில் மிஸ்ர், மற்றும் ஃபுஸ்தாத் வெற்றி கொள்ளப்படுதல்.


09. கி.பி. 643 இல், 

ஃபார்ஸ், இஸ்கந்தரீயா, ரையின் வெற்றி கொள்ளப்படுதல்.

திப்ரிஸ்தான் முஸ்லிம்களுக்குக் கீழ்ப்படிதல்.

இன்னும் ஆர்மேனியா, ஆஜர்பைஜான் போன்ற நாடுகளும் இஸ்லாமிய கிலாபத்திற்குள் உள்வாங்கப் படுதல்.

ஹுராஸான் வெற்றிகொள்ளப்படுதல்.


10. கி.பி. 644 இல், 

மிக்ரான், கிர்மான், தராபிலஸில் வெற்றிகள்.


11. அமீருல் முஃமினீன் கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில், இஸ்லாமியக் கிலாபத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட நாடுகளின் பரப்பளவு சுமார் 22.5 இலட்சம் சதுர கிலோ மீட்டர்கள்( 22.5 Sqr.km.) ஆகும்.


 கிலாபத்தின் அரசியல் நிர்வாகம். 


அமீருல் முஃமினீன் கலீஃபா உமர் (ரலி) அவர்களது காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யமானது பரந்து விரிந்து காணப்பட்டது. இதனால் நிர்வாகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் ஏற்படத் தொடங்கின. இதனால் இராஜ்ய நிலப்பரப்பானது மாகாணங்களாகவும், மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டன. இவ்வாறு பிரிக்கப்பட்ட மாகாணங்கள் எத்தனை என்பதில் வரலாற்று ஆசிரியர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. சிலர் 8 என்றும் இன்னும் சிலர் அதிகம் என்றும் கருத்துக் கூறுகிறார்கள்.


 இந்த அடிப்படையில் இராஜ்யப் பிரதேசம் பின்வருமாறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன :


I. முழு அரேபியாவும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.

 ஒன்று மக்கா.

மற்றொன்று மதீனா.


II. ஈராக் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.

ஒன்று பஸ்ராவும்,குபாவும் இணைந்த பகுதி.


மற்றொன்று ' யூப்ரடீஸ்' 'டைக்ரீஸ்' நதிப் படுகைகளும், 'ஜெஸீரா'(மொஸபதேமியா) என்ற இடைப்பட்ட பகுதியுமாகும்.


III. ஷாம் தேசம்( சிரியா ) தனி மாகாணமாகக் காணப்பட்டது.


IV. பலஸ்தீன் ( அய்லாப் பிரதேசம்).


V. பலஸ்தீன் (ரம்லாப் பிரதேசம்).


VI. எகிப்து ( கீழ்ப் பகுதி).


VII. எகிப்து ( மேல்ப்  பகுதி).


VIII. பாரசீகம் ( குராஸான்).


XI. பாரசீகம் ( ஆஜர்பைஜான்).


X. பாரசீகம் ( பர்ஸ் ).


  ஒவ்வொரு பிரதேசமும் பல்வேறு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. பாரசீகத்தில் மட்டும் சுமார் 47 மாவட்டங்கள் இருந்ததாகக் கூறப்படுகின்றது. இவ்வாறாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 100 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


  ஒவ்வொரு பிரதேசமும் மாகாணங்களும் கவர்ணர் அல்லது வலி என்ற பொறுப்புதாரரால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. அந்தப் பிரதேசங்களில் பிரிக்கப்பட்ட ஏனைய அதிகார வரம்புகள் பின்வருமாறு : 


கதீப் - தலைமைச் செயலாளர்.


 கதீப் அல் தீவான் - இராணுவச் செயலாளர்.


ஸாகிப் அல் கர்ராஜ் - வருவாய்த் துறை அதிகாரி.


ஸாகிப் அல் பைத்துல் மால் - கருவூல அதிகாரி.


காழி - தலைமை நீதிபதி.


  இன்னும் சில மாவட்டங்களில் தனிச்சிறப்பு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப் பட்டிருந்தார்கள்.அப்படிப்பட்ட மாவட்டங்களின் தலைமைத் தளபதியாக 'வாலி' என்பவர் நியமனம் செய்யப் பட்டிருந்தார்கள்.

இவ்வாறு ஒரு நாட்டின் இறைமை,அரசியல் அதிகாரங்கள் பிரயோகிக்கப்படும் முறையை வைத்து, அந்த நாடு ஒற்றையாட்சி அரசா? அல்லது சமஸ்டியாட்சி அரசா?   என்ற முடிவுக்கு வரமுடியும்.

 

 எனவே சமஸ்டி அரசு என்றால் என்ன?


அதன் தன்மைகள் என்ன?


அமீருல் முஃமினீன் கலீஃபா உமர் (ரலி) அவர்கள் மேற்கொண்ட ஆட்சிமுறை நடவடிக்கைகள் எவ்வாறு நவீன கால அரசியல் முறைகளோடு ஒத்துச் செல்கிறன? என்பதை  இன்ஷா அல்லாஹ் 

அடுத்த தொடரில் எதிர்பாருங்கள்.  .........


கருத்துகள்