இஸ்லாமியக் கிலாபத் ஒழிக்கப்பட்டு 100 வருடங்கள் ( ஒரு சகாப்தம்) கடந்த நிலையில், அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்.

இஸ்லாமியக் கிலாபத் ஒழிக்கப்பட்டு 100 வருடங்கள் ( ஒரு சகாப்தம்) கடந்த நிலையில், அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும். 

பகுதி - 02

 தொகுத்து வழங்குபவர் 
 M.I.M.Jawher Rahman. 
 Poruthota, Kochchikade. 

 கி.பி.632 - கி.பி. 661 வரை குலபா உர்ராஸிதூன்களின் காலம்.

 கி.பி. 632 - கி.பி. 634 வரை கலீஃபா அபூபக்கர்( ரலி) அவர்களின் ஆட்சிக்காலம்.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வபாத்திற்குப் பின் வெற்றிடமாகும் தலைமை பீடத்தை எவ்வாறு நிரப்புவது? என்பது போன்ற அறிவுறுத்தல்கள் எதுவும் அல்குர்ஆனிலோ, ஸுன்னாஹ்விலோ நேரடியாக வழங்கப்பட்டிருக்கவில்லை.

  அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால், அதனை எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய  அரசியல், சமூக, சூழல் நிலைமைகளுக்கு ஏற்ப நடைமுறைப் படுத்துவது கடிடனமாக இருந்திருக்கும். காரணம், உலகம் முடியும் வரை அவ் வழிமுறை ஒன்றை மட்டுமே பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்த சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். ஏனெனில்;  குர்ஆன், ஸுன்னாஹ்வில் திருத்தங்களையோ, மாற்றங்களையோ, கூட்டல் குறைத்தல்களையோ செய்ய முடியாது என்பது மார்க்கச் சட்டமாகும்.

 ஆதலால் நேரடியான ஒரு வழிமுறையைக் காண்பிக்காது, பிரச்சினைகள் தோன்றும் போது அவற்றைத் தீர்க்க கையாளவேண்டிய  வழிமுறைகளை இஸ்லாம் காட்டித் தந்திருக்கின்றது.

والذين استجا بؤلربهم واقامؤ الصلاة وامرهم شوراي بينهم.

" தவிர, அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளைகளை அங்கீகரித்து தொழுகையையும் கடைபிடித்து ஒழுகுவார்கள்.அவர்களுடைய ஒவ்வொரு காரியத்தையும் தங்களுக்குள் கலந்தாலோசிப்பார்கள்"...( 42: 38) என்றும்,

وشاورهم في الامر
"அன்றி, ( யுத்தம், சமாதானம் முதலிய) மற்ற எல்லாச் செயற்பாடுகளின்போது அவர்களைக் கலந்தாலோசிப் பீராக.." ( 3: 159) 
என்றும்,

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு வழிமுறையாக கலந்தாலோசித்தலை அல்குர்ஆன் அறிமுகப்படுத்தியிருந்தது. 

  அல்குர்ஆனின் நேரடி வழிகாட்டல்களோ, முன்னய வேதங்களின் வழிகாட்டல்களோ இல்லாத பல சந்தர்ப்பங்களில்  நபிகள் நாயகம்( ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுடன் கலந்தாலோசித்துத் தீர்மானங்களைப் பெற்றிருந்தார்கள். உதாரணமாக, பத்ர் யுத்தத்தில் பிடிபட்ட போர்க் கைதிகளை என்ன செய்வது? என்ற தீர்மானங்களை ஸஹாபாக்களைக் கூட்டி கலந்தாலோசித்தே முடிவெடுத்தார்கள்.
 
 அல்குர்ஆனினதும் நபியவர்களினதும் இவ்வழி காட்டல் ஸஹாபாக்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்ததால்,  நபியவர்களின் மரணத்தின் பின் ஸகீபா பனி ஸ ஈதா என்றழைக்கப்பட்ட கலந்துரையாடல் மண்டபத்தில் ஒன்று கூடிய நபித்தோழர்கள் பல்வேறுபட்ட கருத்துப் பரிமாறல்களின் பின்பு அபூபக்கர் (ரலி) அவர்களைக் கலீஃபாவாகத் தெரிவு செய்தார்கள். 
உமர்(ரலி) அவர்க:ளின் உரைக்குப் பின் யாரையும் எதிர்பார்க்காமல் முன் வந்த பஷீர் இப்னு ஸஅத் அல் அன்ஸாரி (ரலி) என்ற நபித்தோழர், அபூபக்கர் (ரலி) அவர்களின் கரங்களில் 'பைஅத்' என்ற உறுதிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள். அதன்பிறகு  உமர்(ரலி), அபூ உபைதா(ரலி) அவர்களும், அதன்பின்னர் அங்கிருந்த ஒவ்வொரு ஸஹாபாத் தோழர்களும் உறுதிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள். அன்று முதல் அபூபக்கர்(ரலி) அவர்கள் ரஸூலுல்லாஹ்வின் பிரதிநிதியாக (கலீபதுர் ரஸூல்) பதவியேற்று பைஅத் செய்தார்கள். இதுவே முதல் தடவையாக கலீஃபா என்ற பதம் இஸ்லாமிய அரசியல் வழக்கிற்குள் உள்வாங்கப் பட்டது.

தொடரும்.........

கருத்துகள்