இஸ்லாமியக் கிலாபத் ஒழிக்கப்பட்டு 100 வருடங்கள் ( ஒரு சகாப்தம்) கடந்த நிலையில், அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்.
இஸ்லாமியக் கிலாபத் ஒழிக்கப்பட்டு 100 வருடங்கள் ( ஒரு சகாப்தம்) கடந்த நிலையில், அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்.
பகுதி - 06
தொகுத்து வழங்குபவர்
M.I.M.Jawher Rahman.
Poruthota, Kochchikade.
கி.பி.632 - கி.பி. 661 வரை குலபா உர்ராஸிதூன்களின் காலம்.
.............................................
கி.பி. 634 - கி.பி. 644 வரை கலீஃபா உமர்( ரலி) அவர்களின் ஆட்சிக்காலம்.
------ --------- ---------- ------
சமஸ்டி அரசின் முன்னோடி .
இன்றைய நவீன உலகில் ஒற்றையாட்சி அரசு, சமஸ்டியாட்சி அரசுகள் குறித்துப் பேசப்படுகின்றன. ஆனால் கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலேயே கலீஃபா உமர் (ரலி) அவர்கள் இஸ்லாமிய அரசை நிர்வகித்த முறையே; சமஸ்டி அரசியல் முறையென அரசறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். காரணம் ஆட்சியின் நிலப்பிரதேசம் பல மாநிலங்களாக, பல மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு; அரசியல் இறைமை, அதிகாரங்கள் என்பன மத்திய அரசிற்கு மட்டுமல்லாது, மாநில அரசுகளுக்கும் பிரித்து வழங்கியிருந்தார்கள். இவ்வாறு அதிகாரங்கள் மத்திய அரசிடம் குவிந்து காணப்படாது அது மாநில அரசுகளுக்கும் பகிர்ந்து வழங்கப்படுதலையே சமஸ்டி அரசு என்று பின்னாளில் வந்த அரசியலறிஞர்கள் கூறினார்கள்.
உதாரணமாக :
" ஒரு மத்திய அரசின் கீழ் பல மாநில அரசுகள் ஒன்றாக இணைந்து நடாத்தும் ஆட்சி முறையே சமஸ்டி ஆட்சி முறை" என ஹெமில்டன் குறிப்பிட்டார்.
" நாட்டின் ஒற்றுமையினை மாநில அரசுகளின் உரிமைகளோடு இணைக்கும் உடன்படிக்கையே சமஸ்டி ஆட்சி முறை" என டைசி குறிப்பிட்டார்.
கி.பி. 1776 இல் நடைபெற்ற அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தின் பின், தமது பாதுகாப்பினை பலப்படுத்திக் கொள்வதற்காக அன்றிருந்த 13 சிறிய அரசுகள் இணைந்து அதாவது மாநில அரசுகள் இணைந்து
(பிரித்தானியாவின் ஆதிக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக )
ஐக்கிய அமெரிக்க குடியரசினை ( ஐ.அமெரிக்க சமஸ்டியினை) உருவாக்கினர்.
உலகில் முதலாவது தோன்றிய சமஸ்டி அரசு என்று பிற்கால அறிஞர்கள் கூறினாலும், இவ்வாறான மாநில, மாகாண அரசுகளை உருவாக்கி, அதற்கு தனித் தனியான கவர்னர்களையும் நியமித்து செவ்வெனே ஆட்சி நடாத்திய பெறுமையானது, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரண்டாவது கலீஃபாவான அமீருல் முஃமினீன் உமர் ( ரலி) அவர்களையே சாரும்.
காரணம் இதற்கு முன்னால் இருந்த அரசுகளின் ஆட்சி முறைமைகளை உற்று நோக்கினால் அது தெளிவாகின்றது.
கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருந்த நதிக்கரை நாகரீகங்கள் மூலம் உருவாக்கப்பட்ட அரசே, நதிக்கரை நாகரீக அரசுகள் என்று சொல்லப்படுகின்றன. இதற்கு உதாரணமாக நைல் நதி நாகரீக அரசு, மொசபதேமிய நாகரீக அரசு, சிந்துவெளி நாகரீக அரசு போன்றவைகளைக் குறிப்பிடலாம். சுயதேவைப் பொருளாதார முறையால் தன்னிரைவு கொண்டிருந்த இந்த அரசுகளின் பிரதான பொருளாதாரமாகக் காணப்பட்டது விவசாயமும் கால்நடை வளர்ப்புமாகும்.
இதனால் தான் இந்த அரசுகள் நதிக் கரைகளை அண்டியே உருவாகித் தோற்றம் பெற்றிருந்தன. இங்கு ஏற்பட்ட பிரச்சினைகளத் தீர்த்து வைக்க அரசுகள் செயற்பட்டாலும், காலப்போக்கில் இந்த அரசுகள் சர்வாதிகாரப் போக்கைப் பின்பற்றியதைக் காணலாம். இதன் காரணமாக நீண்ட காலத்திற்கு இந்த நாகரீக அரசுகளால் நிலைத்து நிற்க முடியாத நிலை ஏற்பட்டது.
இங்கு மக்களின் அரசியல், பொருளாதார, குடியியல் உரிமைகள் சரிவரக் கருத்திற் கொள்ளப் படாமல் ஆட்சிகள் இடம்பெற்றிருந்தன. அரசன் மட்டற்ற அதிகாரத்துடன் செயற்பட்டான். இதனால் மக்கள் ஆதரவு படிப்படியாக இல்லாமல் போயிற்று.
கி.மு. 7 ஆம் நூற்றாண்டுகளில் தோற்றம் பெற்ற கிரேக்க நகர அரசுகள்:
இந்தக் கிரேக்க நகர அரசுகள் சிறிய சிறிய நகரங்களை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கப் பட்டிருந்தன. இங்கு மக்கள் நேரடியாக அரசியலில் பங்குபற்றினாலும், பெண்கள், அடிமைகள், பிறநகரத்தவர்களுக்கு அதில் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
கி.மு. 500 ஆம் ஆண்டுகளில் தோற்றம் பெற்ற உரோமானியப் பேரரசு:
உரோமிலும் நகர அரசுகளே முதலில் தோற்றம் பெற்றிருந்தன. இங்கு அரசனுக்கு அதிகாரங்கள் இருந்த போதும் அவ்வதிகாரங்களுக்கு சில வரம்புகள் காணப்பட்டிருந்தன.
எனினும் காலப்போக்கில் இந்த சிறிய நகர அரசுகள் நிலைமாறி பரந்த பேரரசாக வளர்ச்சியடைந்ததும், அரசு சர்வாதிகார அரசாக மாறியது.அரசர் வரம்பற்ற அதிகாரங்களைக் கொண்டிருந்தார்.
எனவே பிற்காலங்களில் ரோமப் பைசாந்திய சாம்ராஜ்யமாக இது வியாபித்துக் காணப்பட்டது.
இங்கு அரசன் கடவுளுக்குச் சமமாக மதிக்கப்பட்டான். இறைவனின் பிரதிநிதியான அரசனினால் மட்டுமே சட்டங்களை இயற்ற முடியும் என்றும், மக்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் மன்னனுக்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டும் என்றும், அரசன் இறைவனுக்கு மட்டுமே பொறுப்புக் கூற வேண்டும். மக்களுக்கல்ல என்றும், மன்னர்கள் அரசாள்வதற்கு பரம்பரை பரம்பரையாகத் தகுதியுடையவர்கள் என்ற கருத்துக்களும் மக்கள் மத்தியில் திணிக்கப்பட்டு, முடியாட்சி கட்டவிழ்வித்து விடப்பட்ட நிலையில், மன்னர்கள் ஏக போக உரிமையுடன், கடுமையான சர்வாதிகாரப் போக்குடன் செயற் பட்டுக் கொண்டிருந்தார்கள். இவ்வாறே பாரசீக அரசுகளிலும் மன்னராட்சி முறைகளே காணப்பட்டிருந்தன.
எனவே இந்தக் காலப்பகுதியில் அதாவது, கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ( கி.பி.634 - கி.பி.644 ) நடுப்பகுதியில் தான் கலீஃபா உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் நடந்துகொண்டிருந்தது.
அவர்கள் தமது ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களைப் பல மாநிலங்களாக, மாகாணங்களாக, மாவட்டங்களாகப் பிரித்து அதிகாரங்களைப் பரவலாக்கி ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். இங்கு மாகாணங்களுக்கான கவர்னர் பதவி இன்றியமையாததாகும்.
கவர்னர்களை நியமித்தல்.
அரசாங்க நிர்வாகம் சீராக நடைபெறுவதற்குப் பிராந்திய கவர்னர்களின் திறமையும் சீரிய நிர்வாகமும் தேவை என்பதை உணர்ந்த கலீஃபா உமர் (ரலி) அவர்கள், கவர்னர்களைத் தேர்வு செய்யும் விஷயத்தில் மிகவும் கவனமாகவும் கண்டிப்பாகவும் இருந்தார்கள்.
ஒரு முறை உமர் (ரலி) அவர்கள் ஒருவரை கவர்னராக நியமிக்க நாடினார்கள்.
அவ்வாறு நியமிக்கப்பட இருந்தவர், தமது நியமன உத்தரவைப் பெற்றுக் கொள்ள கலீஃபா உமர் (ரலி) அவர்களிடம் வந்திருந்தார். கலீஃபா அவர்கள் நியமனத்திற்கான உத்தரவைத் தம் செயலாளரிடம் எழுதும் படி கேட்டிருந்தார்கள். அந்த நியமன உத்தரவு எழுதப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் உமர் (ரலி) அவர்களின் இளைய மகன் அவரது மடியில் அமர்ந்தார்.
உமர் (ரலி) அவர்கள் தனது மடியில் அமர்ந்த மகனை அனைத்துக் கொண்டார்கள்.
அதனைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தோழர்,
"அமீருல் முஃமினீன் அவர்களே! உங்கள் குழந்தைகள் உங்களிடம் அச்சமின்றிச் சுதந்திரமாக வருகிறார்கள். ஆனால் என்னுடைய குழந்தைகள் என்னை நெருங்கவே பயப்படுகிறார்கள்" என்று கூறினார்.
இதனை கேட்ட உமர் (ரலி) அவர்கள்,
" உங்கள் குழந்தைகளே உங்களைப் பார்த்து அச்சப்படுகின்றனர் என்று சொன்னால், பொதுமக்கள் இன்னும் அதிகமாக அல்லவா உங்களைப் பார்த்து அச்சப்படுவார்கள். அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டவர்கள் இத்தகைய மனிதர்கள் முன்னால் தங்களது புகார்களைக் (தமது பிரச்சினைகள் சம்பந்தப் பட்ட கோரிக்கைகள் ) கொண்டு வரவே அச்சப்படுவார்கள். எனவே, கவர்னராகும் தகுதி உமக்கு இல்லை" எனக் கூறி, தம்முடைய உதவியாளரை அழைத்து, அந்த நியமன உத்தரவை இரத்துச் செய்யும் படி கூறிவிட்டார்கள்.
மற்றொரு சமயம் இதேபோல் ஒருவரை கவர்னராக நியமிக்க நாடினார்கள். அதற்கான உத்தரவு வழங்கப்படுவதற்கு முன்னர், அந்தத் தோழரை அழைத்து விபரம் சொன்ன பொழுது, அந்தத் தோழர் தமக்கு அந்த கவர்னர் பதவியைத் தருமாறு வேண்டிக் கொண்டார். அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் அவரைப் பார்த்துக் கூறினார்கள்:
"எனது சொந்த விருப்பத்தின் பேரில் உம்மை நான் கவர்னராக நியமிக்க இருந்தேன். ஆனால் அந்த நியமனத்தை நீரே விரும்பிக் கேட்பதில் இருந்து, அந்தப் பதவியை அலங்கரிப்பதற்கு உமக்குத் தகுதி இல்லை என்று கருதுகின்றேன். அந்தப் பதவியை கொண்டு நீர் ஏதேனும் ஆதாயம் அடைய இருக்கின்றீரோ?
என்று நான் கருத வேண்டி உள்ளது. அதற்கு உம்மை நான் அனுமதிக்க மாட்டேன்.
எவரொருவர் இந்தப் பதவியைச் சுமையாகக் கருதுகின்றாரோ, இதனை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை முன்னிட்டு நிர்வாகிக்க எண்ணுகின்றாரோ,
அவரே இந்தப் பதவியை அடைந்து கொள்ளத் தகுதியானவர்."
உமக்கு அந்தத் தகுதி இல்லை எனக் கூறிவிட்டார்கள்.
இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில், குபாவின் கவர்னராக யாரை நியமிப்பது? என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். மிகவும் கடின சித்தம் கொண்ட ஒருவரை நியமித்தால், மக்கள் அவரைப் பற்றி புகார் கூற ஆரம்பித்து விடுகிறார்கள்.
இளகிய மனம் கொண்ட ஒருவரை நியமித்தால், அதனைத் தங்களுக்குச் சாதகமாக மக்கள் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள்.
இது விஷயத்தில் தமக்கு ஆலோசனை கூறுமாறு உமர் (ரலி) அவர்கள் தம் தோழர்களைக் கேட்டுக் கொண்டார்கள். அப்பொழுது அங்கு கூடியிருந்த ஒருவர் எழுந்து,
"இது விஷயத்தில் நான் ஒருவரைப் பரிந்துரை செய்யலாம் என்று கருதுகிறேன்" என்றார்.
உமர் (ரலி) அவர்கள், "யார் அந்த நபர்? சொல்லுங்கள்" என்றார்கள்.
அந்த நபர், " உங்கள் மகன் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் இதற்கு மிகவும் தகுதியானவர்" என்று கூறினார்.
இதனைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள், " உம் மீது இறைவனின் சாபம் உண்டாகட்டுமாக! மிக உயர்ந்த பதவியில் உமர் தன்னுடைய மகனை நியமித்து விட்டார் என்று மக்கள் என்னை ப்பற்றி பேசுவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கின்றீர்களே! இதற்கு நான் எப்பொழுதும் உடன்பட மாட்டேன்" என்று கூறினார்கள்.
இவ்வாறு கவர்னர்களை நியமிப்பதில் கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டார்கள்.
" கவர்னரை நியமனம் செய்வதில் நீங்கள் கடைப் பிடிக்கக் கூடிய வழிமுறைகள் என்ன?" என்று ஒருவர் உமர்( ரலி) அவர்களிடம் கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், " ஒருவர் மக்களுக்கு மத்தியில் இருந்து கொண்டிருக்கும் பொழுது,
அவர் அவர்களது தலைவராக இருக்க வேண்டும்.
இருப்பினும், அவர் தலைவரைப் போல இருக்க மாட்டார். அவர் அவர்களில் ஒருவரைப் போல இருக்க வேண்டும். இத்தகைய மனிதரைத்தான் நான் கவர்னராக நியமிக்க விரும்புகிறேன்" என்று கூறினார்கள்.
அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு நியமனமும் எழுத்துப் பூர்வமாகவே வழங்கப்பட்டது. நியமிக்கப் படும் அதிகாரிகளுக்கான அதிகார வரம்புகள் என்ன? என்பது பற்றிய குறிப்பேடுகள் வழங்கப்பட்டன. அதில் அவர்களுக்கான அதிகார வரம்புகள்,மற்றும் கடமைகள் குறிப்பிடப் பட்டிருந்தன.
நியமிக்கப் பட்ட அதிகாரிகளுக்கு சில விதி முறைகளை அவர்களுக்கு நினைவூட்டக் கூடியவர்களாக இருந்தார்கள் கலீஃபா உமர் (ரலி) அவர்கள்.
"ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்! உங்களை நான் உத்தரவிடும் படைத்தளபதியாகவோ, மக்கள் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடும் அதிகாரம் கொண்டவராகவோ நியமிக்கவில்லை.
மாறாக, மக்கள் உங்களது நன்னடத்தைகளைப் பார்த்து பின்பற்றுகின்ற வழிகாட்டும் தலைவர்களாகவே நியமித்திருக்கின்றேன். மக்களுக்கு என்னென்ன உரிமைகள் வழங்கப்பட்டுள்ளனவோ, அவற்றை வழங்கி விடுங்கள். அதிகார துஷ்பிரயோகம் செய்து,
அவர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கி விட வேண்டாம். வரம்பு மீறி அவர்களைப் புகழ வேண்டாம். அது தவறான பாதைக்கு அவர்களை அழைத்துச் சென்று விடும். மக்களின் முகங்களில் அறைந்தாற் போல் உங்கள் கதவுகளை மூட வேண்டாம். வலிமையுள்ளவர்கள் வறியவர்களை ஆக்கிரமிக்க அனுமதிக்கவும் வேண்டாம். நீங்கள் தான் உயர்ந்தவர் என்ற நினைப்புடன் இருக்க வேண்டாம்.
அதுவே நீங்கள் அவர்கள் மீது செலுத்தும் அடக்கு முறையின் முதல் படியுமாகும்" என்று உமர் (ரலி)அவர்கள் கூறுவார்கள்.
அது மட்டுமல்லாமல், கவர்னர்கள், இன்னும் ஏனைய அனைத்து அதிகாரிகளின் நியமனங்களுக்கு முன்பாக,
அவர்களின் சொத்து குறித்து முழுப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அவரது அதிகார நாட்களின் பொழுது ஏதேனும் இயல்புக்கு மாறாக சொத்து மதிப்புக் கூடியது என்றால்! அந்த அதிகாரி அழைக்கப்பட்டார். அதற்கான பதில் அளிக்கும் படியும் கோரப்பட்டார். இன்னும் அவ்வாறு இயல்புக்கு மீறி சொத்து சேர்க்கப்பட்டிருந்தால், அந்தச் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசின் கஜானாவில் சேர்க்கப்பட்டது.
இவ்வாறு, தான் தூர தேசத்தில் இருந்தாலும், தனக்கு கீழ் இருக்கக்கூடிய மாநில, மாகாண அரசுகளில் வாழக்கூடிய மக்களின் பொருளாதார, அரசியல், குடியியல் உரிமைகளைப் பேணக் கூடியவர்களாகவும், அவர்களின் வாழ்க்கை, வாழவாதார நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்தக்கூடிய வகையிலும் கலீஃபா உமர் (ரலி) அவர்கள் நடந்து கொண்டார்கள். இதுவே அதிகாரங்கள் பகிரப்பட்டு சிறப்பான ஆட்சிமுறையாக நடை பெற்றது. நீதியானதும் நியாயமானதுமான
பெரிய அரசியல் சாம்ராஜ்யம் எவ்வாறு அமைதியாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை செயல்முறை வடிவில் செய்து காட்டிய செயல் வீரராக கலீஃபா உமர் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.
இதுவே இன்று சமஸ்டி முறையாட்சிகளிலும் காணப்படுகிறது.
சமஸ்டி முறையான ஆட்சியிலும் இன்று முதலமைச்சர்கள் நியமிக்கப் படுவதையும், மாநிலங்கள் ரீதியாக முறையாக அதிகாரங்கள் பகிரப்படுவதையும், ஒவ்வொரு மாநிலங்களிலும் அம்மாநில மக்களின் விருப்பு வெருப்பக்களுக் கமைய சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப் படுவதையும் காணலாம்.
இன்றைய காலத்தில் ஐக்கிய அமெரிக்கா, கனடா, அவஸ்ட்ரேலியா, சுவிஸ், ஜேர்மனி, ரஸ்யா, இந்தியா போன்ற நாடுகள் சமஸ்டியாட்சி முறை கொண்ட நாடுகளாகவே காணப்படுகின்றன.
அதேநேரம் பல இனங்கள் மற்றும் பல மொழிகளைப் பேசக் கூடிய மக்கள் வாழக்கூடிய நாடுகளுக்கும் இந்த அதிகாரப் பரவலாக்கல் மறைமையைக் கொண்ட சமஸ்டி ஆட்சி முறையே சிறந்தது.
இந்தியா இவ்வாறான சமஸ்டி மறைமையைக் கொண்டிருந்தாலும், அது ஓர் அறைகுறை சமஸ்டியாட்சி முறைமையைக் கொண்ட நாடாகவே காணப்படுகிறது.
இலங்கையில் பல இனங்கள்,பல சமூகங்கள்,பல மொழிகளைப் பேசக் கூடிய மக்கள் வாழ்ந்து வருகின்ற போதும், இங்கும் சமஸ்டி முறைமையான ஆட்சி முறைமையே தேவை என்று 1956 ஆம் ஆண்டுகளிலிருந்தே சுட்டிக்காட்டப் பட்டாலும், இன்னும் அது எட்டாக்கனியாகவே இருப்பதைக் காணலாம்.
அதிகாரங்கள் பகிரப்பட்டு, எல்லோருக்கும் சமமான அரசியல், பொருளாதார,கலாசார, மனித நேய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் வேற்றுமைகளுக்கு மத்தியில் ஒற்றுமை காணல் என்பது இந்தச் சமஸ்டியாட்சி மூலம் உணரப்படுகிறது.
ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் இது தவிர்க்கிறது.
நவீன காலங்களில் உலகில் தோன்றுகின்ற பல சமஸ்டிகள் பல சமூகத்தன்மை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. இந்த அடிப்படையில் இந்தியா, சுவிஸ் போன்றவற்றை இதற்கு உதாரணங்களாக குறிப்பிடலாம்.
இந்த அடிப்படையில் பல் சமூக மக்கள், பல மொழிகள் பேசக்கூடிய மக்கள், பல கலாசாரங்களைக் கொண்ட மக்கள் வாழக்கூடிய அரசுகளுக்கு அதிகாரப் பரவலாக்கள் முறைமையைக் கொண்ட சமஸ்டி ஆட்சி முறையே சிறந்தது என்று கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலேயே கலீஃபா உமர் (ரலி) அவர்கள் தமது செயல்முறைமை அரசியல் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கின்றார்கள் என்றால்!
அது ஒன்றும் மிகையான எடுத்துக்காட்டல்ல.
இன்ஷா அல்லாஹ்
அரசியல் நிர்வாகம் தொடரும்....

கருத்துகள்
கருத்துரையிடுக