இஸ்லாமியக் கிலாபத் ஒழிக்கப்பட்டு 100 வருடங்கள் ( ஒரு சகாப்தம்) கடந்த நிலையில், அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்.
இஸ்லாமியக் கிலாபத் ஒழிக்கப்பட்டு 100 வருடங்கள் ( ஒரு சகாப்தம்) கடந்த நிலையில், அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்.
பகுதி - 04
தொகுத்து வழங்குபவர்
M.I.M.Jawher Rahman.
Poruthota, Kochchikade.
கி.பி.632 - கி.பி. 661 வரை குலபா உர்ராஸிதூன்களின் காலம்.
கி.பி. 634 - கி.பி. 644 வரை கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம்.
முதலாம் கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்களின் இறுதிக் காலப் பிரிவில் இஸ்லாமிய அரசும், சமூகமும் எதிர் கொண்டிருக்கும் பல்வேறு சவால்களையும் கருத்திற் கொண்டு,முக்கிய ஸஹாபாக்களுடன் கலந்து ஆலோசனை நடாத்தி, உமர் (ரலி) அவர்களை தமக்குப் பின்னால் இஸ்லாமிய கிலாபத்தின் கலீஃபாவாக நியமித்தார்கள்.
அபூபக்கர் (ரலி) அவர்களின் வபாத்திற்குப் பின், உமர் (ரலி) அவர்கள் பதவியேற்றுக் கொண்டார்கள். அதன் பின் மஸ்ஜிதுன் நபவியில் கூடியிருந்த மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அந்த உரையின் இறுதியில்:
"எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை நிர்வகிப்பதற்கு, இறைமறையிலிருந்தும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்வியலில் இருந்தும், அபூபக்கர் (ரலி) அவர்களின் வழிமுறைகளிலிருந்தும் நான் வழிகாட்டலை பெற்றுக் கொள்வேன். இந்தப் பணியை செம்மையாக நிறைவேற்றுவதற்கு உங்களுடைய உதவியை நாடுகின்றேன். நான் நேர்வழியில் சென்றால், என்னைப் பின்பற்றுங்கள். நான் தவறினால், என்னை நெறிப்படுத்துங்கள். எனவே, அதன் மூலம் நாம் அனைவரும் வழி தவறிப் போய்விடமாட்டோம்".
அபூபக்கர் (ரலி) அவர்கள், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரதிநிதியாக (கலீஃபத்துர் ரசூல்) ஏற்று பைஅத் செய்தார்கள்.
அது முதல், கலீஃபா என்ற பதம் இஸ்லாமிய அரசியலில் வழக்கிற்கு வந்தது. உமர்( ரலி) அவர்கள் பதவியேற்றதும் அவர் நபிகளாரின் பிரதிநிதியின் பிரதிநிதி( கலிபத, கலிபத ரஸூலுல்லாஹ்) என்றழைக்க வேண்டி ஏற்பட்டது. அது அழைப்பதற்கு சிரமமான ஒரு சொற்றொடர் ஆகும். அது மட்டுமல்லாமல், அபூபக்கர் (ரலி) அவர்களின் பிரதிநிதி என்பது இஸ்லாமிய சிந்தனை வழி பொருத்தமற்றதாகவும் இருந்தது.
ஆட்சிப் பொறுப்பை ஏற்கக் கூடியவருக்கு, அவரது ஆட்சி அமைப்பைப் பற்றி அறிவதற்கு என்று ஓர் அடையாளம் தேவை என்பதை உணர்ந்த உமர் (ரலி) அவர்கள், இது தொடர்பாகத் தமக்கு உதவுமாறு அங்கிருந்தவர்களைக் கேட்டுக் கொண்டார்கள்.
அமீருல் முஃமினீன்.
இவ்வாறு இருக்கும்போது,
ஒரு நாள் லபீத் இபுனு ரஃபிஆ, அதி இப்னு ஹாதிம் என்ற இருவர் குஃபாவிலிருந்து மதினாவிற்கு வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மஸ்ஜிதைப் பார்த்து அதிசயத்து நின்ற அவர்களைக் கடந்து அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் சென்றார்கள். அந்த இருவரும் அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களிடம் தங்களது வருகையைப் பற்றி "அமீருல் முஃமினீன்" அவர்களிடம் தெரிவித்து விடுமாறு வந்தவர்கள் கூறினார்கள்.
அவர்கள் "அமீருல் முஃமினீன்" என்று இலக்கிய நயத்துடன் கூறிய அந்த வார்த்தை அம்ரிப்னுல் ஆஸ் (ரலி) அவர்களுக்குப் பிடித்து விட்டது.
" இதனை நாம் உமர்( ரலி) அவர்களுக்குச் சூட்டினால் என்ன? இதன் விளக்கம் என்ன?" என்றார்கள். அதற்கு, " நாம் அனைவரும் முஸ்லிம்கள். முஸ்லிம்கள் அனைவரும் மூஃமீன்கள். உமரோ முஸ்லிம்களின் தளபதியாக இருக்கின்றார். எனவே அவர் " அமீருல் முஃமினீன்" என்று விளக்கம் அளித்தார்கள்.
உடனே உமர் (ரலி) அவர்களைக் காணச் சென்ற அம்ரிப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள்,
"அமீருல் முஃமினீன் அவர்களே!
உங்களைக் காண குபாவிலிருந்து இருவர் வந்திருக்கின்றார்கள். உங்களை பார்க்க உங்களிடம் அனுமதி கேட்கிறார்கள்" என்று கூறினார்கள்.
"அமீருல் முஃமினின்" என்ற வார்த்தையை உமர் (ரலி) அவர்கள் கேட்ட மாத்திரத்திலேயே, இந்த வார்த்தையை நீங்கள் கண்டுபிடித்தது எவ்வாறு?
என்று ஆச்சரியத்துடன் கேட்டார்கள். அம்ர் இப்னுல் ஆஸ் ( ரலி) அவர்கள் சற்றுமுன் நடந்ததைக் குறிப்பிட்டார்கள்.
" நம்முடைய பதவி குறித்து அழைப்பதற்காக பொருத்தமானதொரு வாசகத்தைத் தான் தேடிக் கொண்டிருந்தோம். இதுவே நல்லதாகத்தான் இருக்கிறது" என்று கூறி பின்னர் இந்த வாசகத்தை பயன்படுத்துவது குறித்து மக்களிடம் கலந்து ஆலோசித்தார்கள் உமர் (ரலி) அவர்கள். மக்களும் அங்கீகரிக்கவே, அன்றிலிருந்து உமர் (ரலி) அவர்களை மக்கள் "அமீருல் முஃமினீன்" என்றழைக்கலானார்கள். அதன் பின் வந்த ஆட்சியாளர்களை விளிக்கும் போது அமீருல் முஃமினீன் என்றழைத்த போதும், அவர்களைப் பொதுவாக எல்லோரும் கலீஃபா என்றே அழைத்தனர். அது போல் பிற்காலங்களில் வந்த ஆட்சியாளர்களான உமையாக்கள், அப்பாசியர்கள் போன்றவர்களும் தம்மை கலீஃபாக்கள் என்றே அழைத்துக் கொண்டனர். அதுமட்டுமன்றி, இஸ்லாம் அறிமுகப்படுத்திய இவ் வரசியல் வழிமுறையும் சிந்தனையும் "கிலாபத்" கோட்பாடு என்றே அழைக்கப்பட்டது.
மதீனமா மாநகரைத் தலை நகராகக் கொண்டு அமைக்கப்பட்ட ஆட்சியாக, நபிகளார்( ஸல்)அவர்கள் அறிமுகப்படுத்தியிருந்த இஸ்லாம்; இஸ்லாமிய ஆட்சியை அரேபியத் தீபகற்பம் முழுவதும் விரிவடையச் செய்திருந்தார்கள். அபூபக்கர்( ரலி) அவருடைய காலத்திலும் அரேபிய தீபகற்பம் முழுவதும் இஸ்லாமிய சாமராஜ்ஜியம் விரிவடைந்து இருந்தது.
எனினும் இரண்டாவது கலீஃபா அமீருல் மஃமினீன் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் ஏற்பட்ட முதற்கட்ட ராஜ்ஜிய வியாபகம், கீழைத்தேய ரோம சாம்ராஜ்யத்தின் ஆசிய, ஆபிரிக்க பிரதேசங்களையும், பாரசீக சாம்ராஜ்யத்தையும் உள்ளடக்கியிருந்தது. இஸ்லாமிய கிலாபத்தின் அபிவிருத்தி எவ்வாறு வளர்ச்சியடைந்து கொண்டு சென்றது என்பதைப் பின்வருமாறு நோக்கலாம்.
01 .கி.பி. 635 இல், டமஸ்கஸ், ஹிம்ஸ் இன்னும் காதிஸிய்யா மாகாணத்தின் வெற்றிகள்.
02. கி.பி. 636 இல், யர்மூக் யுத்தம். அதில் ரோம் வாசிகளும் வெற்றிகொள்ளப் படல்.
03. கி.பி. 637 இல், பாரசீகத்தின் தலை நகர் மதாயின் கைப்பற்றப்படல். ஈராக், பைத்துல் முகத்தஸ், ஹுஜிஸ்தான் போன்ற மாகாணங்களும் நகரங்களும் இஸ்லாமியக் கிலாபத்திற்குள் உள்வாங்கப்படுதல்.
04. கி்.பி். 638 இல், ஜெஸீரா( மொஸபதேமியா) வெற்றிகொள்ளப் படல்.
நிஹாவந்த் வெற்றி மற்றும் ஈராக்கின் அஜம் மீது தாக்குதல் நடாத்தப்படல்.
கஃபதுல்லாஹ்வின் புனித எல்லைகள் விரிவாக்கப்படுதல்.
ஹிஜ்ரி கலெண்டர் அறிமுகம்.
ஹிஜ்ரி காலெண்டர்:-
ஒவ்வொரு சமூகமும் தமது வரலாற்றைப் பதிவு செய்வதற்கும், நடைமுறைச் செயற்பாடுகளுக்கும், நடைமுறைக் கொடுக்கல் வாங்கல்களைப் பதிவதற்கும்,அரசியலில் உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்களின் நிதி, நிர்வாக விடயங்களைப் பதிவதற்கும் கலண்டர் முறை அவசியமாகும்.
அப்போதுதான் அந்த சமூகத்தின் நிகழ்கால விடயங்கள் பதியப் படுவதோடு, எதிர்கால விடயங்களையும் திட்டமிட இலகுவாக இருக்கும்.பிற்கால சமூகத்திற்கு , முன்னய கால வரலாற்று நிகழ்வுகள் தெளிவாக இருக்கும். காரணம் ஒரு விடயம் எந்த மாதத்தில், எந்த வாரத்தில், எந்த நாளில், எந்த ஆண்டில் நடைபெற்றன? என்பதைத் தெளிவாகப் பதிவதற்கு ஏதுவாக அமையும்.
அந்த அடிப்படையில் நாங்கள் எடுத்துக் கொண்டால், ஹிஜ்ரி கலண்டருக்கு முன்னால் பல கலண்டர்கள் உலகத்திலே வலம் வந்து கொண்டிருந்தன .
எகிப்துக் கலண்டர்,
பாபல் கலண்டர்,
கிரேக்கத்திய கலண்டர்,
ரோமானியக் கலண்டர்,
ஈஸவி ஜூலியன் கலண்டர்,
ஆங்கிலேய கிரிகோரியன் கலண்டர்,
யூதக் கலண்டர்
என பல்வேறு கலண்டர் முறைமைகள் காணப்பட்டிருந்தன.
என்றாலும் முஸ்லிம்களுக்குள் ஒரு ஆண்டுக் கணிப்பீடு இல்லாதது ஒரு குறையாகவே இருந்தது. இவ்வாறு இருக்கும்போது:
"அமீருல் முஃமினீன் அவர்களே! உங்களிடமிருந்து தொடர்ந்து எங்களுக்குக் கட்டளைகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அந்த உத்தரவுக் கடிதங்களில் திகதிகள் குறிப்பிடப்படவில்லை. சில வேலைகளில் கடிதத்தில் உள்ள வாசகங்கள் முரண்படுகின்றன. எனவே அவற்றில் எது முந்தையது? எது பிந்தையது? என்ற குழப்பம் நீடிக்கின்றது. உங்களது உத்தரவுகளைச் சரிவரப் புரிந்து கொள்ள இயலவில்லை"
என்று பஸராவின் கவர்னராக இருந்த அபூமூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்கள் ஒரு கடிதத்தை உமர் (ரலி) அவர்களுக்கு எழுதினார்கள்.
பஸரா கவர்னரது கருத்து உமர் (ரலி) அவர்களைச் சிந்திக்க வைத்தது. அதே நேரத்தில் யெமன் தேசத்திலிருந்து
ஷஅபான் மாதம் குறிப்பிடப்பட்டதொரு பணம் வந்திருந்தது. அப்படி என்றால், இனிக் கடிதங்களில் மாதத்தை குறிப்பிடலாம் என்றால், அது இந்த வருடத்தில் உள்ளதா? கடந்த வருடத்தினுடையதா? அல்லது அடுத்த வருடத்தை உடையதா? என்ற சந்தேகத்தையும் உருவாக்கி விடுமே என்று சிந்தித்தார்கள். உடனே தோழர்களின் உதவியை நாடி இது குறித்து அவர்களிடம் ஆலோசனை நடத்தினார்கள்.
சிலர் ரோமர்களின் முறையையும், இன்னும் சிலர் பாரசீக முறைப்படியும் காலண்டர் உருவாக்கிக் கொள்ளலாம் என்றார்கள்.
ஆனால் உமர் (ரலி) அவர்களோ, "நாம் முஸ்லிம்கள். முஸ்லிம்களுக்கு என்று ஒரு நாட்காட்டி வேண்டும்" என்றார்கள். "சரி நம்முடைய காலக்கணக்கு எப்பொழுதிலிருந்து துவங்குகின்றது என்று கூறுங்கள்" என்றார்கள் உமர் (ரலி) அவர்கள். (சிந்தனை செய்வோருக்கு இங்கே நிறையப் படிப்பினைகள் காணப்படுகின்றன. அந்நியக் கலாசாரங்களைப் பின்பற்றுவதில் நம்மவர்கள் எந்த அளவு மூழ்கிப் போயிருக்கின்றார்கள் என்பதை சற்று சிந்தித்து அவைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.)
இறைத்தூதர் ( ஸல்) அவர்கள் பிறந்த தினத்திலிருந்து என்று ஒரு சிலர் கூறினார்கள்.
இன்னும் சிலர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்த நாளிலிருந்து என்றார்கள்.
இன்னும் சிலர்,
ரஸூல்( ஸல்) அவர்களுக்கு நுபுவ்வத் கிடைத்த நாளிலிருந்து என்றார்கள்.
அப்பொழுது அலி (ரலி) அவர்கள், "முஸ்லிம்களின் மறுமலர்ச்சி என்பது மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் புறப்பட்ட நாளிலிருந்து ஆரம்பமாகின்றது" என்றார்கள்.
இந்த ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸஃபர் மாதம் 27ஆம் நாள் வெள்ளிக்கிழமை மதீனாவுக்கான ஹிஜ்ரத்தை ஆரம்பித்தார்கள். இருந்தாலும் மூன்று நாட்கள் தவ்ர் குகையில் தங்கி இருந்தார்கள். எனவே ரபியுல் அவ்வல் மாதம் தான் தமது பயணத்தை தொடர்ந்தார்கள். அவ்வாரென்றால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் புறப்பட்ட பொழுது அந்த ஆண்டின் இரண்டு மாதங்கள் கடந்து இருந்தன.
ஹிஜ்ரி கணக்கு வைத்து ஆண்டு தொடங்குவது என்றால் மாதங்களில் எந்த மாதத்தை முதல் மாதமாக குறிப்பது? என்ற குழப்பம் ஆரம்பமானது.
சிலர் ரஜப் மாதம் என்றார்கள்.
இன்னும் சிலர் புனிதமிக்க ரமலான் மாதம் என்றார்கள்.
வேறு சிலர் புனிதமிக்க துல் ஹஜ் மாதம், அதிலிருந்து தான் துவங்க வேண்டும் என்றார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்கள், " அரேபியாவில் புத்தாண்டு என்பது 'முஹர்ரம்' மாதத்திலிருந்துதான் துவங்குகின்றது" என்றார்கள். உஸ்மான் (ரலி) அவர்களின் ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நபி (ஸல்) அவர்களின் மதீனா ஹிஜ்ரத்தின் 16 வருடங்களுக்குப்பின்,
அதாவது கி.பி.638 ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஹிஜ்ரி காலண்டருக்கு அடித்தளமிடப்பட்டது.
பின்னர் இந்த முடிவு அனைத்து இஸ்லாமியக் கிலாபத் நடைமுறைப்படுத்தும் பிரதேசங்களுக்கும் அறிவிக்கப்பட்டது.
ஒரு சமூகத்திற்குத் தேவையான, மற்றும் அரசியல் நிர்வாகத்திற்கு இன்றியமையாத இந்தக் காலண்டர் முறையை, அமீருல் முஃமினீன் கலீஃபா உமர் (ரலி) அவர்கள் எந்த அளவு தூர நோக்கு சிந்தனையோடு செய்திருக்கின்றார்கள் என்றால்;
அவைகள் வார்த்தைகளால் வடிக்க முடியாத,
பொன் எழுத்துக்களால் பதிக்க முடியாத உன்னத சாதனை என்றே சொல்லலாம்.
இது இஸ்லாமியக் கிலாபத்தின் வளர்ச்சிக்கு மென்மேலும் உரமூட்டியது என்றால் அது ஒன்றும் மிகையாகாது.
இன்ஷா அல்லாஹ்
கிலாபத் தொடரும்...........

கருத்துகள்
கருத்துரையிடுக