இஸ்லாமியக் கிலாபத் ஒழிக்கப்பட்டு 100 வருடங்கள் ( ஒரு சகாப்தம்) கடந்த நிலையில், அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்.
இஸ்லாமியக் கிலாபத் ஒழிக்கப்பட்டு 100 வருடங்கள் ( ஒரு சகாப்தம்) கடந்த நிலையில், அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்.
பகுதி - 03
தொகுத்து வழங்குபவர்
M.I.M.Jawher Rahman.
Poruthota, Kochchikade.
கி.பி.632 - கி.பி. 661 வரை குலபா உர்ராஸிதூன்களின் காலம்.
கலீஃபா ( ஆட்சியாளர் ):-
அல்லாஹுத்த ஆலா அவனது அருள் மறையாம் அல் குர்ஆனில், ஸூரத்துல் பகராவின் 30 ஆவது வசனத்தில்
واذقال ربك للملاءكة اني جاعل في الارض خليفة .
" நபியே! உம்முடைய இறைவன் வானவர்களிடம், " நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ( பிரதிநிதியை ) ஓர் இனத்தைப் படைக்கப் போகிறேன்" என்று கூறிய போது,.....(2:30) என்று கூறுகின்றான்.
இங்கு 'வாழையடி வாழையாக வரும் ஓர் இனம்' என்பதைச்சுட்ட மூலத்தில் 'கலீஃபா' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு 'தலைமுறை தலைமுறையாய், ஒருவருக்குப் பின் ஒருவராகத் தொடர்ந்துவரும் ஓர் இனம் என்று பொருள்.
மற்ற வசனங்களில் அல்லாஹ் கூறுகின்றான்:
وهوالذي جعلكم خلاءف الارض
அவன்தான் உங்களை பூமியில் வாழையடி வாழையாக ( பிரதிநிதிகளாக) வரும் தலைமுறையினராக ஆக்கினான்.( 6:165)
ويجعلكم خلفاءالارض
உங்களை பூமியில் வாழையடி வாழையாக வரும் தலைமுறையினராக ( பிரதிநிதிகளாக ) ஆக்கியிருப்பவன் யார்? ( 27:62)
ولونشاءلجعلنامنكم ملاءكة في الارض يخلفون.
நாம் நாடியிருந்தால் உங்களுக்குப் பதில் வானவர்களை பூமியில் வாழையடி வாழையாக வரும் தலைமுறையினராக (பிரதிநிதிகளாக ) ஆக்கியிருப்போம்.(43:60)
ஆகவே இங்கு வாழையடி வாழையாக வரும் ஓர் இனம் ( கலீஃபா) என்பது மனித இனமே சுட்டிக் காட்டப் படுவதாக தப்ஸீர் ஆசிரியர்கள் விளக்கம் அளித்திருக்கின்றார்கள்.( தஃப்ஸீர் இப்னு கஸீர்).
இந்த வசனத்தை( 2:30) ஆதாரமாகக் கொண்டு குர்துபீ (ரஹ்) அவர்கள் உள்ளிட்ட விரிவுரையாளர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:
" மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், அவர்களின் சச்சரவுகளைத் தடுத்து நிறுத்தவும், அவர்களில் அநீதி இழைத்தவனிடமிருந்து அநீதி இழைக்கப்பட்டவனுக்கு ( உரிமையை மீட்டுத் தந்து) உதவவும்,
குற்றவியல் தண்டனைகளை நிறைவேற்றவும்,
அடாத செயல்களைச் செய்வதிலிருந்து அவர்களைத் தடுக்கவும்,
அத்துடன் ஒரு தலைவர் இல்லாமல் எதையெல்லாம் நடைமுறைப் படுத்துவது இயலாதோ அத்தகைய முக்கியமான நிர்வாகப்பணிகளுக்காகவும்'கலீஃபா' (ஆட்சியாளர்) ஒருவரை நியமனம் செய்வது கட்டாயம் ஆகும்.
ஏனெனில்; ஒரு கடமை, எது இல்லாமல் முழுமை பெறாதோ அதைச் செயல்படுத்துவதும் கடமையே ஆகும் .
ஒருவர் தலைமைப் பதவிக்கு எவ்வாறு வரலாம்? என்பது தொடர்பாகப் பல்வேறு கருத்துக்களை அறிஞர்கள் தெரிவித்துள்ளார்கள்.
நேரடியான மார்க்க ஆதாரங்களைக் கொண்டு ஒருவர் தலைமைப் பதவியை அடையலாம்.
அபூபக்கர் (ரலி) அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றது இந்த வகையில்தான் என நபி வழி அறிஞர்களில் ஒரு குழுவினர் கூறுகிறார்கள்.
அல்லது (நேரடி ஆதாரம் இல்லாவிட்டாலும்) ஆதாரத்தின் சமிக்ஞை மூலம் ஒருவர் தலைமைப் பொறுப்பை ஏற்கலாம். இக்கருத்தை நபிவழி அறிஞர்களில் மற்றொரு குழுவினர் தெரிவிக்கின்றனர்.
நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் அபூபக்கர் (ரலி) அவர்களே ஆட்சித் தலைவராக (கலீஃபா) வரவேண்டும் என்பதற்கு மார்க்கத்தில் நேரடி ஆதாரம் இல்லாவிட்டாலும், சூசகமான ஆதாரங்கள் உள்ளன என்பது இவர்களின் கருத்தாகும்.
காரணம் ஸகீபா பனி ஸ ஈதாவில், உமர்(ரலி) அவர்கள்; அபூபக்கர் (ரலி) அவர்களையும் அங்கிருந்த ஸஹாபாத் தோழர்களையும் பார்த்து பின்வருமாறு கூறினார்கள்:
"சந்தேகமில்லாமல், முஹாஜிர்களில் நீங்கள் தலை சிறந்தவர்கள். தவ்ர் குகையில் இருந்த இருவரில் ஒருவராகவும் இருந்தீர்கள். உங்களைத்தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் இமாமாக நியமணம் செய்தார்கள். தொழுகை என்பது நமது மார்க்கத்தின் தலை போன்றதாக இருக்கிறது".
இன்னும் உங்களைக் காட்டிலும், இதனை விடச் சிறந்த தகுதியைப் பெற்ற ஒருவர் நம்மிடையே யார்தான் இருக்கிறார்கள்?
என்று கூறி கையை நீட்டுங்கள் சத்தியப்பிரமாணம் செய்கிறோம் என்று சொன்னதுமே, பஷீர் இப்னு சஅத் அல் அன்ஸாரி (ரலி) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களின் கரங்களில் சத்தியப்பிரமாணம் (பைஅத்) செய்தார்கள். இதை நாம் முன்னய பகுதியிலும் பார்த்திருக்கின்றோம்
அல்லது முன்பு பொறுப்பு வகித்தவர், தமக்குப் பின்னால் இன்னவர் பொறுப்பேற்கலாம் என்று இனம் காட்டி விட்டுச் செல்வதன் மூலம், ஒருவர் தலைமைப் பதவியை அடையலாம்.
கலீஃபா அபூபக்கர்( ரலி) அவர்கள் தமக்கடுத்து உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக வரலாம் என்று இனம் காட்டி விட்டுச் சென்றது இதற்குச் சான்றாகும்.
அல்லது முன்பு பொறுப்பில் இருந்தவர், தமக்குப் பின்னால் யார் பொறுப்புக்கு வருவது என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை உத்தமர்களைக் கொண்ட ஒரு குழுவின் ஆலோசனைக்கு விட்டுச் செல்லலாம். கலீஃபா உமர் (ரலி) அவர்கள் இவ்வாறே செய்தார்கள்.
அல்லது (அதிகாரிகள், அறிஞர்கள் மற்றும் சான்றோர்கள் இடம்பெற்ற) நிபுணர் குழுவினரின் ஏகோபித்த முடிவின் பேரில் ஒருவருக்கு வாக்களித்து (பைஅத் செய்து) பொறுப்பேற்கச் செய்யலாம்.
அல்லது நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள ஒருவர் வாக்களிப்பின் (பைஅத் செய்வதன்) மூலம் ஒருவரை ஆட்சியாளராகத் தேர்ந்தெடுக்கலாம். அப்போது அவரது தேர்வை ஏற்பது அனைவரினதும் கடமையாகிவிடும் எனப் பெரும்பாலான அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இது அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும் என இமாமுல் ஹரமைன் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
ஆட்சித் தலைவர் ஆணாக, சுதந்திரமானவராக, பருவம் அடைந்தவராக, புத்தி சுவாதீனமுள்ளவராக, முஸ்லிமாக, நீதிமானாக, சட்ட ஆய்வாளராக, கண்பார்வை உள்ளவராக, ஊனமற்றவராக, போர்க்கலையிலும் அதன் வியூகங்களிலும் நிபுணராக,
சரியான கூற்றின் படி குறைஷி குலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
ராஃபிள்கள் கூறுவதைப் போன்று, (குறைஷிகளிலேயே) ஹாஷிம் குடும்பத்தைச் சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமோ, தவறுகளிலிருந்து காக்கப் பெற்றவராக இருக்க வேண்டும் என்ற கட்டாயமோ கிடையாது.
ஆட்சித் தலைவர் தவறு புரிந்தால் அவரைப் பதவி நீக்கம் செய்யலாமா? கூடாதா? என்பது தொடர்பாகக் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
அவரைப் பதவி நீக்கம் செய்யக் கூடாது என்பதே சரியான கருத்தாகும். இதற்கு,
"ஆட்சியாளருக்கு எல்லாச் சூழ்நிலைகளிலும் கட்டுப்படுங்கள்; ஆனால், எந்த விஷயம் பகிரங்க இறைமறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ, அதை அவரிடம் நீங்கள் கண்டால் தவிர " என்ற நபி மொழி ஆதாரம் ஆகும். (ஸஹீஹுல் புஹாரி).
அதே நேரம் ஒரே நேரத்தில் இரு தலைவர்களையோ அதற்கும் மேற்பட்டவர்களையோ நியமனம் செய்தல் கூடாது. இதற்கு,
"உங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ஒருமித்ததாக இருக்கும் நிலையில் உங்களிடையே பிளவை ஏற்படுத்த யாரேனும் நாடினால், அவர் யாராக இருந்தாலும் அவருக்கு மரண தண்டனைதான்" எனும் நபிமொழி ஆதாரம் ஆகும். (ஸஹீஹ் முஸ்லிம், அபூதாவூத், நஸ ஈ, முஸ்னத் அஹ்மத்.)
இதுவே பெரும்பாலோரின் கூற்றாகும்.
எனவே கலீஃபா என்றால் யார்?
அதன் கருத்து என்ன?
அவருடைய கடமைகளும் பொறுப்புகளும் என்ன?
கலீஃபாவை எவ்வாறு தெரிவு செய்வது?
குலபா உர்ராஸிதூன்கள் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்கள்?
போன்ற விடயங்கள் மேலே மேலோட்டமாக முன்வைக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.
அந்த அடிப்படையில் இஸ்லாமிய வரலாற்றின் முதலாவது கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்களுடைய காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளைப் பின்வருமாறு நோக்கலாம்.
01. கோத்திரங்களுக்கிடையிலான கிளர்ச்சிகள் அடக்கப்பட்டன.
02. உஸாமா இப்னு ஸெய்த் (ரலி) அவர்களின் தலைமையில் ஷாமிற்கான படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
03. மதம் மாறியவர்களுடனான மற்றும் பொய் நபிமார்களுடனான யுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
04. பாரசீகம் மீதும் படையெடுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.
05. அல்குர்ஆன் நூல் உருவில் வடிவமைக்கப்பட்டது.
இவ்வாறு அரேபியத் தீபகற்பத்தில் இஸ்லாமியக் கிலாபத் தடம் புரலாமலும், கருத்து முரண்பாடுகள் இல்லாமலும், இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தின் பிரகாரம் மிகவும் நீதமாகவும், அமைதி கலந்த இராஜ்யமாகவும், ஆட்சி செய்து விட்டு இவ்வுலகை விட்டும் விடைபெற்றுச் சென்றார்கள்.
கிலாபத்தின் கால அளவு :- 02 வருடங்களும் 03 மாதங்களும்.
கி.பி. 634 இல் கலீபா அபூபக்கர்( ரலி) அவர்கள் வபாத்தானார்கள்.!
இன்ஷா அல்லாஹ்
கிலாபத் தொடரும்......

கருத்துகள்
கருத்துரையிடுக