அல்லாஹ்வின் அத்தாட்சிகள்
அல்லாஹ்வின் அத்தாட்சிகள்...(01)
மௌலவி யூனுஸ் தப்ரீஸ்.
அல்லாஹ்வின் அத்தாட்சிகள் என்ற தொடரை இன்ஷா அல்லாஹ் தொடராக எழுத உள்ளேன்.
இதன் மூலம் அல்லாஹ்வின் வல்லமைகள், ஆற்றல்களை எடுத்து காட்டுவதோடு அல்லாஹ்வின் அத்தாட்சிகளை காணும் போது நாம் என்ன சொல்ல வேண்டும் என்பதையும் உங்கள் சிந்தனைக்கு கொண்டு வர உள்ளேன்.
நேரடியாக அல்லாஹ்வின் அத்தாட்சிகளுக்குள் செல்வதற்கு முன் சிந்தனைக்காக சில குர்ஆன் வசனங்களை கவனிப்போம்.
"மேலும் (நபியே !) நீர் நல்லுபதேசம் செய்வீராக ! ஏன் என்றால் நிச்சயமாக நல்லுபதேசம் விசுவாசிகளுக்கு பயனளிக்கும். (51-55)
உபதேசங்களை அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தால் தான் நமது உள்ளங்கள் இறைவன் பக்கம் அதிகமாக சார்ந்து இருக்கும். இறை உபதேசங்களை விட்டும் தூரமாக இருந்தால் நமது உள்ளங்கள் இருண்டதாக ஷைத்தானின் பக்கம் அதிகமாக சார்ந்து விடும்.
அதனால் தான் அல்லாஹ் நபியைப் பார்த்து மக்களுக்கு உபதேசம் செய்யுங்கள் என்று கூறுகிறான்.
நிச்சயமாக இறையுதவியால் இதை வாசிக்க கூடிய ஒவ்வொருவருக்கும் இந்தக் கட்டுரை பயன் தரும்.
மேலும்
"(உண்மையான) முஃமின்கள் யாரென்றால் அல்லாஹ்வின் பெயர் அவர்களின் முன் கூறப் பட்டால் அவர்களுடைய இதயங்கள் பயத்தால் நடுங்கிவிடும். அவனுடைய வசனங்கள்(அத்தாட்சிகள்) அவர்களுக்கு ஓதி காட்டப் பட்டால் அவை அவர்களுக்கு ஈமானை அதிகப் படுத்தும். மேலும் அவர்கள் தங்கள் இறைவன் மீதே நம்பிக்கை வைப்பார்கள்." (8-2)
அல்லாஹ் என்று சொல்லும் போது உள்ளத்தில் பயம் வர வேண்டும். பயம் வரக் கூடிய அளவிற்கு நமது உள்ளத்தை பதப்படுத்த வேண்டும்.
நபியவர்கள் ஸஹாபாக்களின் உள்ளங்களை அப்படி தான் பதப்படுத்தினார்கள்.
அல்லாஹ்வின் அத்தாட்சிகள் மூலம் நமது உள்ளத்தை பக்குவப்படுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
மேலும் இந்த வசனத்தில் அல்லாஹ்வின் வசனங்களை எடுத்து காட்டப் பட்டால் ஈமான் அதிகரிக்கும் என்று இறைவன் உறுதிப் படுத்துகிறான். குர்ஆன் வசனங்களை எடுத்துச் சொல்லி மக்களை நெறிப்படுத்தும் போது உண்மையில் ஈமான் அதிகரிக்கும்.
அடுத்தடுத்த தொடர்களில் அல்லாஹ்வின் வசனங்களுடன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளையும் நேரடியாக எடுத்து காட்டும் போது உங்களது ஈமான் அதிகரிப்பதை உணர்ந்து கொள்வீர்கள்.
அல்லாஹ் கூறுகிறான் " உங்களை நாம் படைத்ததெல்லாம் வீணுக்காக தான் என்றும், நிச்சயமாக நீங்கள் நம்மிடம் மீட்டப் படமாட்டீர்கள் என்றும் நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களா. ? (23-115)
இந்த உலகத்தில் குறிப்பிட்ட சொற்ப காலம் வாழ்வதற்காக அல்லாஹ் நம்மை படைத்துள்ளான்.
இந்த உலகத்தின் சிற்றின்பங்களுக்காக நிரந்தரமான மறுமை இன்பங்களை மறந்து விடக் கூடாது. அதற்காக தான் இந்த உபதேசம்.
நாம் எப்போது எந்த இடத்தில், எந்த நிலையில், எந்த ஊரில், மரணிப்போம் என்று யாருக்கும் தெரியாது.
ஒவ்வொரு நாளும் மரணத்தை நினைத்துக் கொண்டே வாழ வேண்டும்.
நம்மனைவருக்கும் மரணத்தின் முடிவு நல்லதாகவே அமைய வேண்டும். அதற்காக தான் இந்த நினைவூட்டல்.
அல்லாஹ் கூறுகிறான் " நீங்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்திக் கொண்டும், (அவனை) விசுவாசம் கொண்டுமிருப்பின் உங்களை வேதனை செய்து அவன் என்ன செய்யப் போகிறான்.? (4-147)
நாம் நாளாந்தம் அமல்கள் மூலமாக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினால் ஒரு போதும் அல்லாஹ் நம்மை தண்டிக்கமாட்டான் என்பதை தான் மேற்ச் சென்ற வசனம் நமக்கு நினைவூட்டுகிறது.
அதே நேரம் அல்லாஹ்வின் உபதேசங்களை புறக்கணித்து நன்றிகெட்டவர்களாக நடந்து கொண்டால் கடுமையான முறையில் தண்டிப்பதாக அல்லாஹ் எச்சரிக்கிறான்.
" எவர் எமது நல்லுபதேசத்தைப் புறக்கணிக்கின்றாரோ நிச்சயமாக அவருக்கு நெருக்கடியான வாழ்க்கை இருக்கின்றது. மேலும் மறுமை நாளில் நாம் அவனைக் குருடனாக எழுப்புவோம். (அப்போது) அவன் என் இறைவா ! ஏன் என்னை குருடனாக நீ எழுப்பினாய் ? நான் நிச்சயமாக (உலகத்தில்) பார்க்கின்றவனாக இருந்தேனே என்று கேட்பான். (அதற்கு) நம் வசனங்கள் உன்னிடம் வந்தன அவைகளை நீ மறந்து விட்டாய் அவ்வாறே இன்றைய தினம் நீயும் (நம் அருளிலிருந்து) மறக்கடிக்கப்படுகிறாய் என்று அல்லாஹ் கூறுவான்.(20-124,125,126)
இந்த வசனங்கள் கடுமையாக எச்சரிக்கை செய்வதை அவதானிக்கலாம்.
எனவே இறை உபதேசங்களை புறக்கணிக்கும் அந்த கூட்டத்தில் சேர்ந்து விடாமல் நாளாந்தம் இறைவனை நினைக்கும் கூட்டத்தில் சேர்வதற்காக தான் இந்த கட்டுரை எழுதப்படுகின்றது. இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் சந்திப்போம்.

கருத்துகள்
கருத்துரையிடுக