அல்லாஹ்வின் அத்தாட்சிகள்

 அல்லாஹ்வின் அத்தாட்சிகள்...(02)


மௌலவி யூனுஸ் தப்ரீஸ்.


சென்ற தொடரில் சில முக்கியமான தகவல்களை பதிவு செய்து இருந்தேன்.


 இந்த தொடரிலும் தேவையான குர்ஆன் வசனங்களை பார்த்து விட்டு இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் இருந்து நேரடியாக அல்லாஹ்வின் ஒவ்வோரு அத்தாட்சிகளையும் அதன் தாக்கங்களையும் கவனிப்போம்.


அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நேரடியாக பார்வையிடுவதற்கும், அதன் மூலம் அல்லாஹ்வின் வல்லமைகளை கண்டு கொள்வதற்காகவும் பூமியை சுற்றி பாருங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.


" பூமியில் பிரயாணம் செய்து குற்றவாளிகளின் முடிவு எப்படி இருந்தது என்பதை கவனித்து பாருங்கள் என்று நபியே ! நீங்கள் கூறுங்கள்."

 (27-69) இதே கருத்தில்  (6-11) (29-20) போன்ற வசனங்களிலும் கூறுகிறான்.


ஆரம்ப காலங்களில் ஒவ்வொரு நபிமார்களும்  ஏகத்துவ கொள்கையை மக்கள் மன்றத்தில் முன் வைத்த சந்தர்ப்பங்களில் அதிகமான மக்கள் அந்த அந்த நபியையும், அவர் கொண்டு வந்த கொள்கையையும் மறுத்ததோடு, முடிந்தால் இறை தண்டனையை எங்கள் மீது கொண்டு வாருங்கள் என்று சவால் விட்டு கேலி செய்த சந்தர்ப்பங்களில் இறுதியாக அல்லாஹ் நேரடியான தண்டனையை கொடுத்து தண்டித்து, அடுத்தடுத்து வந்த கூட்டங்களுக்கும் இதை ஒரு முன் எச்சரிக்கையாக அல்லாஹ் எடுத்து காட்டி, அவர்கள் எப்படி அழிக்கப்பட்டார்கள் என்பதை நேரடியாக போய் பார்த்து உங்களை சீர்திருத்திக் கொள்ளுங்கள் என்று குர்ஆனில் பரவலாக அல்லாஹ் கூறி வருகிறான்.


ஆணவம் பிடித்தவர்கள் அழிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக இன்று உலகில் பல நாடுகளில் இருந்து மாறி மாறி சென்று பார்த்து வருகிறார்கள். 

குறிப்பாக சில அரபு நாடுகளிலும், அதனை சூழ அமைந்துள்ள இடங்களிலும் நேரடியாக சென்று பார்வையிடுகிறார்கள்.

 இதன் மூலம் அல்லாஹ்வின் வல்லமையை கண்டு கொள்வதோடு, நம்மை நாம் சீர்திருத்திக் கொள்ள வேண்டும்.


இப்படியான இடங்களை பார்வையிடுவதற்காக அல்லாஹ் நமக்கு வழங்கிய உடல் ரீதியான ஆரோக்கியம். மற்றும் பொருளாதார ரீதியான வளம் இந்த நிஃமத்துகளுக்காக  அடிக்கடி  அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும்.


"அல்லாஹ்வுடைய அருட் கொடைகளை நீங்கள் எண்ணுவீர்களாயின் அவற்றை கணக்கிட்டு விடமாட்டீர்கள். நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், நன்றி கெட்டவனாகவும் இருக்கிறான்." (14-34) (16-18)

பொதுவாக மனிதனைப் பொருத்தவரை அமல் ரீதியான செயல் பாடுகளில் அலட்சியமாக இருக்கிறான். அது மட்டுமல்ல மனிதன் பலவீனமாக படைக்கப் பட்டுள்ளான். மற்றும் பதட்டக் காரனாகவும் படைக்கப் பட்டுள்ளான்.

அதனால் தான் இந்த தலைப்பின் மூலமாக மறந்த அமல்களை நினைவூட்டல் செய்யப் படுகிறது.

" அல்லாஹ் (தன் சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கி வைக்க நாடுகிறான். மேலும் மனிதன் பலவீனமாக படைக்கப் பட்டுள்ளான்." (4-28)

மேலும்" நிச்சயமாக மனிதன் (பேராசை கொண்ட) மிக்க பதட்டக்காரனாக படைக்கப் பட்டுள்ளான்." (70-19)


பலவீனமாகவும், பதட்டக்காரனாகவும் படைக்கப் பட்ட மனிதன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை காணும் போது அல்லாஹ்வை நினைக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் எதிர் பார்ப்பாகும். 


(விசுவாசம் கொண்டோரே ! இவ்வாறு) நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், பின்னர் நின்ற நிலையிலும், இருந்த நிலையிலும், உங்களுடைய விலா புறங்களின் மீது ( படுத்திருக்கும் நிலையிலு)ம் அல்லாஹ்வை திக்ர் செய்யுங்கள்..." (4-103)


எல்லா சந்தர்ப்பங்களிலும்  திக்ருகளின் மூலம் அல்லாஹ்வை நாம் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக தனது ஆற்றல் நிறைந்த அத்தாட்சிகளை அல்லாஹ் நினைவுப் படுத்துகிறான்.


அதை பின் வருமாறு அல்லாஹ் நினைவுப் படுத்துகிறான்.


" நிச்சயமாக வானங்கள், மற்றும் பூமியைப் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும், அறிவுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

(அறிவுடைய) அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த நிலையிலும், தங்கள் விலா புறங்களின் மீது (சாய்ந்து)ம் அல்லாஹ்வை நினைத்து,

رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ  

எங்கள் இரட்சகனே ! நீ இவற்றை வீணுக்காகப் படைத்து விடவில்லை, நீ மிகத் தூயவன், (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக ! என்று கூறுவார்கள். ( 3-189,190)


நல்லடியார்கள் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை காணும் போது இந்த பிரார்த்தனையை சொல்வார்கள் என்று அத்தாட்சிகளுக்கு சொந்தக்காரன் சொல்லித் தருகிறான். எனவே மேல் சொன்ன துஆவை மனனமிட்டுக் கொள்ளுங்கள்.  


அடுத்த தொடரில் இருந்து எந்த எந்த அல்லாஹ்வின் அத்தாட்சிகளை காணும் போது இந்த துஆவை ஓத வேண்டும் என்பதை நினைவுப் படுத்த உள்ளேன்.


 இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் சந்திப்போம்.

கருத்துகள்